மாநிலங்களுக்கிடையே தற்காலிக போக்குவரத்து அனுமதி பெற, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
இப்படி வரக்கூடிய சரக்கு வாகனங்கள், தமிழகத்தின் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தற்காலிக சோதனை சாவடிகளில் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், தமிழகத்தின் உள்ளே வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இனி ஆன்லைன் மூலமாகவும் தற்காலிக அனுமதி பெறும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன் மூலம் சோதனை சாவடிகளில் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.