வெளிச்சம் பாய்ச்சிய ஜூ.வி; வேலூர் சிறுவன் குடும்பத்துக்குக் குவியும் உதவிகள்!

கடந்த ஜூ.வி இதழில், வேலூரைச் சேர்ந்த வளர்மதி, உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் அவதிப்படும் தன்னுடைய 19 வயது மகன் சரண்சங்கீத்தோடு வறுமையில் போராடிக்கொண்டிருக்கும் துயரம் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான 26-11-2022 அன்றே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சிறுவனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கிய தி.மு.க நிர்வாகிகள்

மேலும் வளர்மதியிடம் போனில் பேசிய அமைச்சர், ‘‘நீங்கள் படும் துயரத்தை ஜூ.வி-யில் படித்துத் தெரிந்துகொண்டேன். கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்று நம்பிக்கை கொடுத்தார்.

வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுவனைப் பார்வையிட்ட பின்னர், ‘‘ ‘வீடு இல்லை’ என்று வளர்மதி கூறியிருக்கிறார். என் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி, அதில் ஒரு வீடு ஒதுக்கித் தருகிறேன். அதுமட்டுமின்றி, மாதம்தோறும் அந்தக் குடும்பத்துக்கு மளிகைப்பொருள்கள் கொடுக்கப்படும். மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து உதவியும் செய்துதரப்படும்’’ என்றார்.

நந்தகுமார் எம்.எல்.ஏ சொன்னபடியே, இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும், வளர்மதியின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினர். அரசு உதவிகளைத் தாண்டி, தாங்களும் முடிந்த உதவிகளைச் செய்வதாக வாசகர்களும் நம் அலுவலகத்தைத் தொடர்புகொள்கிறார்கள்.

பண உதவி செய்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பாலசுப்பிரமணியன்

இந்த நிலையில், ஜூ.வி கட்டுரையை வாசித்த வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரி பாலசுப்பிரமணியனும் வளர்மதிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இன்று மதியம் தன்னுடைய மகள் மோனாவுடன், வளர்மதியின் வீட்டுக்குச் சென்ற பாலசுப்பிரமணியன், வளர்மதி மகனின் கன்னத்தை தடவி நம்பிக்கைக் கொடுத்தார். பின்னர் 10,000 ரூபாய்க்கான காசோலையையும், இனிப்பு பலகாரத்தையும் வளர்மதியின் மகனிடம் கொடுத்தனர். தாயுள்ளதோடு நேரில் வந்து உதவிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பாலசுப்பிரமணியனுக்கும், அவரின் மகளுக்கும் வளர்மதி நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.