
2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா?
2022ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்று பிறந்துவிட்டது. முதல் வெள்ளிக்கிழமையான நாளை டிசம்பர் 2ம் தேதி “டிஎஸ்பி, கட்டா குஸ்தி, தெற்கத்தி வீரன், மஞ்சக் குருவி” உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. எப்போதுமே வருடக் கடைசி மாதமான டிசம்பர் மாதம் பல படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வருடமும் பல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதத்தில் வெளியாகும் என்று சில படங்களின் வெளியீடுகள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு மேலும் சில படங்களும் இந்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வரலாறு முக்கியம்' ஆகிய படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “லத்தி, அகிலன்” ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக உள்ளது. எப்போதோ வெளிவர வேண்டிய 'இடம் பொருள் ஏவல், தமிழரசன்' ஆகிய படங்களும் இந்த மாதத்தில் வெளியாகலாம்.
“செம்பி, பிசாசு 2, டிரைவர் ஜமுனா, ஏழு கடல் ஏழு மலை, இடி முழக்கம்” ஆகிய படங்களையும் இந்த மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஹாலிவுட் படமான 'அவதார் 2' டிசம்பர் 16ம் தேதி தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குப் பிறகான படங்களின் வெளியீடுகள் இருக்கும்.