சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்று சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் முதன் முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘கடந்தமுறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 39 இடங்களில் வெற்றி கிடைத்தது. வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கான கட்டமைப்பு பணிகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
‘தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பதில், மாவட்டச் செயலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றக் கூடிய நபர்களைத் தேர்வு செய்து பூத் கமிட்டி நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பணிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் . மாவட்டச் செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில், அரசின் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்’ என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.