சென்னை: வரி பாக்கியில் 20 சதவீதம்கூட செலுத்தாத தால்தான், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தவில்லை என்று கூறி, அவருக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கினர்.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித் துறை வழக்கறிஞர் ஏ.பி.னீவாஸ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்துக்கு உரிய வருமான வரியைச் செலுத்தும்படி உத்தரவிட்டும், அவர் வரி பாக்கியைச் செலுத்தவில்லை.
முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23-ம் நிதியாண்டில் தமிழக அரசு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்து 226-ஐ செலுத்தியுள்ளது. அந்தக் கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கப்படவில்லை. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால் சட்டப்படி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியாக உள்ள தொகையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பியும், அதையும்அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருடைய சொத்துகளும், வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன.
ஒரே நேரத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம், மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சித்து வருகிறார். எனவே, வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட எந்த அவசியமும் இல்லை என்பதால், விஜயபாஸ்கரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.