தி.மு.க அரசைக் கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் அ.தி.மு.க-வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், “பொய்யான வழக்கு போட்டால் அ.தி.மு.க முடங்கிவிடுமா.

ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க வளர்ச்சியை தடுக்க முடியாது. தி.மு.க ஆட்சியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிவதாக முதல்வர் சொல்கிறார். நடக்கும் கொடுமைகளை பார்த்து மக்கள் வயிறுதான் எரிந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, சுகாதாரத்துறை அமைச்சரிடம் தன் மகன் நடித்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது, எவ்வளவு வசூல் செய்தது என கேட்கிறார். அதற்கு அமைச்சர், ‘படம் சிறப்பாக இருக்கிறது. பாடல் காட்சிகளுக்குகூட யாரும் வெளியே செல்லாமல் ரசித்து பார்க்கின்றனர்’ என கூறுகிறார். யாரும் ரசித்து பார்க்கவில்லை.

நீங்கள்தான் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டீர்கள். நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன. இதுவா அவசியம். யோகிதைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா? அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து எங்கே வந்து வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா ஸ்டாலின் அவர்களே.
போராட்டத்துக்கு வந்த அ.தி.மு.க தொண்டர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. காவல்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சி மாறினால், காட்சிகள் மாறும். ஏழு கட்சி மாறியவரின் பேச்சை கேட்டுத்தான் இப்படி செயல்படுகிறீர்கள் என தெரியும். அவர் இப்போது தி.மு.க-வில் இருப்பார். ஆட்சி மாறியவுடன் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள்.


தி.மு.க-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். தமிழகத்தை தற்போது ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இப்போதிருப்பது பொம்மை முதல்வர். 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அ.தி.மு.க-வை விமர்சிப்பதற்கு ஒரு யோக்கிதை வேண்டும். அது தற்போதைய முதல்வருக்கு இல்லை.” என்றார்.