புதுடெல்லி: இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் கேரள முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி சி.பி.மேத்யூ உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அந்த மனுக்களை மீண்டும் விசாரிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உளவு பார்த்ததாக கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், எந்த ஆதாரமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு நிவாரண நிதி வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் சிலரை திட்டமிட்டு சிக்க வைத்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கேரள முன்னாள் டிஜிபி சி.பி.மேத்யூ உட்பட போலீஸார் நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே வேளையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்வதிலிருந்து ஐந்து வாரங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான முன்ஜாமீனை கேரள உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் மாலத்தீவை சேர்ந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘சி.பி.மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் போலீஸார் எங்களை வேண்டுமென்றே சிக்க வைத்து சித்ரவதை செய்தார்கள். போலீஸாரால் 3 ஆண்டுகள் கேரள சிறையில் சித்ரவதை அனுபவித்தோம். சி.பி.மேத்யூ மனு மீது நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். அதேபோல் சி.பி.மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று நம்பி நாராயணனும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.