புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் முழு பெண் நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஏற்படுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். எனினும் தற்போது தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஹிமா கோலி, பி.வி.நாகரத்னா, பேலா எம்.திரிவேதி ஆகிய 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
இந்நிலையில் ஹிமா கோலி, பேலா, எம்.திரிவேதி ஆகியோரை கொண்ட முழு பெண் நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அமர்வு திருமணத் தகராறு தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மற்றும் ஜாமீன் விவகாரங்களை விசாரிக்க உள்ளது. இந்த அமர்வு முன் 32 மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் முழுவதும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு முதன்முதலாக கடந்த 2013-ல் ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் கயான் சுதா மிஸ்ரா,ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தார். இதையடுத்து 2018-ல் இரண்டாவது முறையாக முழு பெண் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது மூன்றாவது முறையாக முழு பெண் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதி நாகரத்னா வரும் 2027-ல் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.