காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து-லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் படூரில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து சிறுமயிலூர் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தின் ஒருபுறம் முழுவதும் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் விபத்தில் பலியான இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.