பெங்களூரு, பாரத் ஒற்றுமை யாத்திரையில் கே.ஜி.எப்., – 2 பாடல் இசையை பயன்படுத்தியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அக்கட்சியின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா, யாத்திரை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
காங்கிரஸ் கட்சியின், பாரத் ஒற்றுமை யாத்திரை, செப்டம்பர் 30 முதல் 21 நாட்கள் கர்நாடகாவில் நடந்தது.
இந்த யாத்திரையில், கே.ஜி.எப்., – -2 படத்தின், சுல்தான் பாடல் இசையின் வரிகளை மட்டும் மாற்றி, ராகுல் மற்றும் காங்., கட்சியை புகழ்ந்து பாடிய வரிகள் இடம்பெற்றன.
படத்தின் இசை உரிமையை வைத்திருக்கும் எம்.ஆர்.டி., நிறுவனம், காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா, பாரத் ஜோடோ யாத்திரை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மீது பெங்களூரு நகர மாவட்ட வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், காங்., மற்றும் பாரத் ஒற்றுமை யாத்திரை தொடர்பான கணக்கை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நவம்பர் 8ல் நடந்த விசாரணையின் போது, காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘எதிர் மனுதாரர்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
‘ஆனால் 45 வினாடி மட்டுமே இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. கே.ஜி.எப்., – 2 இசை எங்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை அகற்றப்படும்’ என்றார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, பாடல் இசையை பயன்படுத்திய டுவிட்களை மட்டும் நீக்க காங்கிரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளங்களில் இசை இன்னும் நீக்கப்படவில்லை.
இதையடுத்து, எம்.ஆர்.டி., நிறுவனம், காங்கிரஸ் கட்சி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில், ‘காங்கிரஸ் கட்சி நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. அவர்களது சமூக வலைதள கணக்கில் இருந்து பாடல்கள் நீக்கப்படவில்லை. மாறாக கூடுதல் இசை சேர்க்கப்பட்டுள்ளது’ என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை, நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரசன்ன பாலச்சந்திர வராளி, அசோக் எஸ்.கினகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராகுல், ஊடக தலைவர் சுப்பிரியா, யாத்திரை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜனவரி 12க்கு ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்