சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும் அதிகாலை 1:30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று அதிகாலை 1:30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.
இந்த விமானத்தில் தோகா செல்ல, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை, சுங்க சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு 139 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது.
அதிகாலை 3:50 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்து உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.