புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவை தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ய ஆணையம் அமைக்கும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான ஆணையம் அமைக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் ஹாஜி அப்துல் கனி கான் மற்றும் முகமது அயுப் ஆகியோரின் வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை, அரசியல் சாசன திட்ட விதிமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது. எல்லைகளை மாற்றவோ நீட்டிக்கப்பட்ட பகுதிகளை சேர்க்கவோ கூடாது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் 63வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளை 107-ல் இருந்து 114 ஆக ( பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகள் உட்பட) அதிகரிப்பதை அரசியலமைப்பு விதிமுறை, சட்ட விதிமுறை அதிகாரங்களுக்கு மீறியதாக அறிவிக்க வேண்டும்.
கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு, நாடு முழுவதும் தொகுதிகளை மாற்றியமைக்க, தொகுதி மறுவரையறை சட்டம், 2002-ன் 3வது பிரிவின் கீழ் தொகுதி மறுவரையறை ஆணையம் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன்பின் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘இரு தரப்பு வாதங்களை கேட்டோம். தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்றனர்.