சாய்பசா: ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் டான்டோ பகுதியில் உள்ள காடுகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள மாவோயிஸ்ட் தலைவர் மிசிர் பெஸ்ரா தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் படை போலீஸாரும், ஜார்க்கண்ட் போலீஸாரும் இணைந்து கடந்த 2 வாரங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த தேடுதல் வேட்டையில், இரு தரப்பினர் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 வீரர்கள் காயம் அடைந்ததாக கோல்கன் மண்டல டிஐஜி அஜய் லிண்டா தெரிவித்தார். இங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பல இடங்களில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிபொருட்களுடன், ஏராளமான ஆயதங்களும், இந்த தேடுதல் வேட்டையில் கைப்பற்றப்பட்டன.