தமிழக கோயில்களில் செல்போன்களுக்கு தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ெசல்போன் பயன்படுத்த தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அர்ச்சகர் சீதாராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்செந்தூர் உட்பட சில கோயில்களில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக புகைப்படம் எடுக்க தடை உள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர்.

எனவே, கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அரசு சிறப்பு பிளீடர் சுப்பாராஜ், கோயில் வக்கீல் முத்துகீதையன் ஆஜராகி, ‘‘நவ. 14 முதல் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 300 செல்போன்களை பாதுகாத்திடும் வகையில் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 15 இடங்களில் செல்போனுக்கு தடை உள்ளது. மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பக்தர்கள் பண்பாடு மற்றும் மரபை காத்திடும் வகையில் உடை அணிய வேண்டும்.

செல்போன் பயன்பாட்டை கண்காணிக்க தன்னார்வலர் குழுக்களும் உள்ளன’’என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘திருச்செந்தூர் கோயிலில் அமலாகியுள்ள இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்தி கோயில்களின் புனிதத்தையும், தூய்மையையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.