`தயவுசெஞ்சு வாழ விடுங்க; தொந்தரவு பண்ணாதீங்க’ – காவல் நிலையத்தில் கலங்கிய ராஜ்கிரணின் மனைவியின் மகள்

திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக அறியப்படுபவர் பிரியா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகரான முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு ராஜ்கிரணும், அவரின் மனைவி பத்மஜோதி (எ) கதீஜாவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பிரியா அவரின் கணவர் முனீஸ்ராஜாவுடன் திருச்சி மாவட்டம், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் தஞ்சம் அடைந்தார். இளங்கோ கதீஜாவின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து பிரியா தனது தந்தை இளங்கோ கொடுத்த நகைகளை, தாய் கதீஜாவிடம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கதீஜா ராஜ்கிரண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், `தனது கணவர் நடிகர் ராஜ்கிரன் மீது அவதூறாக பேசியும், தனது குடும்ப நகையை எடுத்துச் சென்ற பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணையின் போது

தற்போது பிரியா கணவருடன் துறையூரில் தந்தை வீட்டில் வசித்து வருவதால், இந்தப் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வரப் பெற்ற புகாரை முசிறி டி.எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்காக அனுப்பப்பட்டது. அதையடுத்து பிரியா, முனீஸ்ராஜா ஆகிய இருவரும் முசிறி டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் காவேரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் இருவரும் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது கதீஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பிரியா – முனீஸ்ராஜா

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, “கதீஜா ராஜ்கிரண் (பிரியாவின் தாயார்) ஒவ்வொரு நாளும் எனக்கு டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதனால கடுமையான மன உளைச்சல்ல இருக்கேன். எங்க போறதுன்னு தெரியாம ஆதரவு கேட்டு எங்க அப்பாகிட்ட போனா, அவர் மேலயும் புகார் கொடுத்துருக்காங்க. ராஜ்கிரண் சார் நல்லவரா இருந்தா, என்னை இப்படி தொந்தரவு செய்றதை கன்ட்ரோல் பண்ணியிருக்க முடியாதா… அந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாக இருக்கணும்னு தான் எதிர்ப்பார்க்குறாங்க. என்னைய என் கணவரோட தயவுசெஞ்சு வாழ விடுங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க. எங்க அப்பா, தாத்தா பாட்டி கொடுத்த நகைகள் அவங்க வீட்ல இருக்கு. அதை போலீஸ் தான் மீட்டுக் கொடுக்கணும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.