திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. திருப்பூரில் வேலை பார்க்கும் இவருக்கு துர்காதேவி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் இருக்கின்றனர். தம்பதியிடையே கருத்துவேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். துர்காதேவி தன்னுடைய ஒன்றரை வயது மகள் ரித்திகாவுடன் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டியில் தன்னுடைய தாய் மாமா பால்பாண்டி வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும் துர்கா கூறியதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரமான நிலையில், குழந்தையின் இறப்புக்குக் காரணமான துர்காதேவி (21), அவருடன் திருமணம் மீறிய உறவிலிருந்த அஜய் (21) என்ற இளைஞரையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “குழந்தை இறப்பு தொடர்பாக துர்காதேவி கூறியதை ஏற்கமுடியவில்லை. இதனால் துர்காதேவியின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்து பார்த்தோம். அதில் எரியோடு பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞருடன் அதிகமாகப் பேசியது தெரியவந்தது. தம்பதியிடையே பிரிவு ஏற்பட, இந்த திருமணம் மீறிய உறவுதான் காரணமாக இருந்திருக்கிறது.

குழந்தை காணாமல் தேடியதாகக் கூறப்படும் அன்றைய இரவிலும்கூட துர்காதேவி, தோட்டத்து வீட்டுக்கு அஜய்யை வரவழைத்து இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது குழந்தை தொட்டிலிலிருந்து இறங்கி தாயைத் தேடி அருகே இருந்த கிணற்றில் விழுந்திருக்கிறது. அன்றைய இரவே துர்காதேவி குழந்தையை தேடியிருக்கிறார். காலையில்தான் காணாமல்போன குழந்தை கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்துதான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

நிலக்கோட்டை தோப்புப்பட்டியைச் சேர்ந்த அஜய் மரவெட்டும் வேலை செய்து வருகிறார். இவர் ஊர்திருவிழாவின்போது துர்காதேவியை பார்த்து செல்போன் மூலமாகப் பேசி பழகியிருக்கிறார். அஜய்க்கும் திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இருப்பினும் துர்காதேவியுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார்.

இதனால்தான் ராஜதுரை மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டார். பிரிந்துவந்த துர்காதேவி தோட்டத்துவீட்டில் இருந்திருக்கிறார். அங்கும் அஜய் வந்து சென்றிருக்கிறார். குழந்தை இறப்புக்கு இருவரும் காரணம் என்பதால் அஜய், துர்காதேவி இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.