தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: நாளை மகா தேரோட்டம்: காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வரும். தேரோட்டத்தில் சுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6ம் நாளான இன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. வரும் 6ம்தேதி காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நாளை (3ம் தேதி) மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெற உள்ளது. தேரடி வீதியில் நிலையில் நிறுத்தியுள்ள பஞ்ச ரதங்களுக்கும் புனித கலசங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. நாளை அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்டத்தின் தொடக்கமாக விநாயகர் தேர் புறப்பாடு நடைபெறும். பின்னர், சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வரும். மதியம் 1 மணி அளவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பாடு நடைபெறும். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெறும்.

அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்செல்வது தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.
தேர் சக்கரங்களுக்கு கட்டைப் போடும் சேவைப் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி- சர்ட்) வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்க உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்டிருந்த தேர் திருவிழா, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுகிறது. எனவே, தீபத்திருவிழா தேரோட்டத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு இன்று முதலே வரத்தொடங்கியுள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தெரிகின்றனர். தேரோட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றை கண்காணிக்க 162 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 22 இடங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.