மும்பை, தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை, சாலையில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டிய இரு இளைஞர்களை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ‘யுடியூப்’ சமூக ஊடகத்தில், ‘வீடியோ’க்கள் பதிவிட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்தார்.
அதிர்ச்சி
இங்கு கர் மேற்கு என்ற இடத்தில் சாலையில் நின்றபடி, யுடியூபில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். இதை 1,000க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்தபடியே அவரது கையை பிடித்து இழுத்தார்.
அதிர்ச்சி அடைந்த பெண் சற்று விலகியதும் அருகே வந்து முத்தமிட முயன்றார். ‘நோ நோ’ என கூறியபடி அந்த பெண் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
வழக்குப் பதிவு
தன்னிடம் இருவர் தவறாக நடக்க முயன்றது குறித்து நேரலையில் விவரித்தபடியே அந்த பெண் நடக்கத் துவங்கினார்.
அப்போது மற்றொரு நபருடன் பின்னால் பைக்கில் பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர், ‘வீட்டில் இறக்கிவிடவா’ என, அந்த பெண்ணிடம் கேட்க, ‘வீடு பக்கத்தில் தான் இருக்கிறது’ என, அந்த பெண் பதில் சொல்லிவிட்டு சென்றார்.
இவை அனைத்தும் நேரலையில் பதிவாகின. இந்த சம்பவம் குறித்து சமூகவலைதளத்தில் பலர் எதிர்வினையாற்றினர். தென் கொரிய பெண்ணும் அந்தக் காட்சிகளை பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, கர் மேற்கு போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மொபீன் சந்த் முகமது ஷேக், 19, மற்றும் முகமது நகிப் சதாரியாலம் அன்சாரி, 20, ஆகியோரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்