ஹைதராபாத், தெலுங்கானாவில் முதல் முறையாக இரண்டு திருநங்கையர், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில்உள்ள மருத்துவக்கல்லுாரியில் 2015ல் மருத்துவ படிப்பை முடித்தார்.
கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்தார். இருவரும் திருநங்கையர்.
பல்வேறு எதிர்ப்பு, தடைகள், அச்சுறுத்தல்கள், சவால், அவமானங்களை தாண்டி, இருவரும் சமீபத்தில் இங்குள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதன் வாயிலாக தெலுங்கானாவில் அரசு டாக்டர்களாக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கையர் என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து பிராச்சி ரத்தோட் கூறியதாவது:
டாக்டர் படிப்பை முடித்ததும் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். அங்கு கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானதால் பணியை ராஜினாமா செய்தேன்.
முதுநிலை மருத்துவ படிப்பு படிப்பதற்காக புதுடில்லி சென்றேன். அங்கும் நிலைமை மோசமாக இருந்ததால் திரும்பி வந்து விட்டேன். திருநங்கையாக இருப்பதால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரத் தயங்குவதாக கூறி, தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் எங்களை பணியில் சேர்க்க மறுத்து விட்டன. நல்ல வேளையாக இந்த அரசு வேலை கிடைத்தது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement