பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கோல்டி பிரர் அமெரிக்காவில் கைது!

பஞ்சாப்பில் கடந்த மே மாதம் 29-ம் தேதி மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஸ்னோய் ஏற்கெனவே சிறையில்தான் இருக்கிறான். மற்றொரு முக்கியக் குற்றவாளியான கோல்டிபிரர் கனடாவில் பதுங்கியிருந்தான். கனடாவிலிருந்து கொண்டுதான் சித்துவைக் கொலைசெய்ய ஆட்களை ஏற்பாடு செய்து பண உதவி, ஆயுத உதவிகளைச் செய்து கொடுத்தான். இந்தக் கொலை நடக்கும்போது குற்றவாளிகளுக்கு அடிக்கடி கோல்டிபிரர் போன் மூலம் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருந்தான்.

சித்து மூஸ்வாலா

சித்துவின் கொலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று கோல்டிபிரர் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளிப்படையாக அறிவித்தான். கோல்டிபிரர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு அரசு ரூ.2 கோடி அறிவிக்கவேண்டும் என்றும், அந்தப் பணத்தை தானே கொடுப்பதாகவும் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் சமீபத்தில் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

சித்து படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து கனடாவில் வசிக்க கோல்டிபிரருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோல்டிபிரர் சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றான். பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அங்கிருக்கும் கலிபோர்னியா, சான்பிரான்ஸிகோ நகரங்களில் வாழ்ந்து வந்தான். இந்த நிலையில் கலிபோர்னியாவில் கடந்த 20-ம் தேதி கோல்டிபிரர் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்திய அரசுக்கு இது தொடர்பாக முறைப்படி இன்னும் அறிவிப்பு வரவில்லை.

கோல்டிபிரர்

ஆனால் இந்திய உளவுத்துறையான ரா அமைப்புக்கும், பஞ்சாப் போலீஸாருக்கும் இது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம், ஸ்ரீமுக்தார் சாஹிப் நகரைச் சேர்ந்த கோல்டிபிரர் கடந்த 2017-ம் ஆண்டு கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்றான். அங்கிருந்து கொண்டு தனது ஆட்கள் மூலம் பஞ்சாப்பில் மிரட்டிப் பணம் பறித்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.