புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரிந்தர் சிங், பஞ்சாப் முதல்வராக இருமுறை பதவி வகித்துள்ளார். முதல்முறையாக கடந்த 2002-ல் பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்ற அமரிந்தர் சிங் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இரண்டாவது முறையாக 2017-ல் முதல்வராக பதவியேற்ற அமரிந்தர் சிங், 2021-ல் பதவியை விட்டு விலகினார். அமரிந்தர் சிங்குக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார்.
இதனால், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி அடைந்த அமரிந்தர் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியில்கூட அக்கட்சி வெற்றிபெறவில்லை.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 19-ம் தேதி அவர் பாஜகவில் தன்னையும் தனது கட்சியையும் இணைத்துக்கொண்டார். இந்நிலையில், அவர் பாஜகவின் முக்கிய அமைப்பான தேசிய செயற்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமரிந்தர் சிங், தன் மீது நம்பிக்கை வைத்து தேசிய செயற்குழு உறுப்பினராக நியமித்ததற்கு மிக்க நன்றி என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருந்து பிறகு அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் ஜெய்வீர் ஷெர்கில். இவர், தற்போது பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இணைந்த முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுணில் ஜாக்கரும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.