தமிழகத்தில் பிரித்தானியா பவுண்டுக்கு பதிலாக இந்திய பணம் கிடைக்குமா என கூறி மோசடிக்கு முயன்ற இரண்டு வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரித்தானிய பவுண்டுகள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அத்துமீறி அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து பணியில் இருந்த பெண்ணிடம் தங்களிடம் பிரித்தானிய பவுண்டு உள்ளது அதற்கு இந்திய பணம் தர முடியுமா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அங்கு பணியில் இருந்த பெண், அது போன்று இங்கு பவுண்டுகளை மாற்ற முடியாது என கூறியதால் வெளிநாட்டவர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.
ஆண் மற்றும் பெண்
அதே இருவர் அரியலூர் சாலையில் உள்ள பூச்செடிகள் விற்கும் கடை ஒன்றிற்குச் சென்று வெளிநாட்டு பணத்தை கொடுத்து இந்திய பணம் கேட்டு அங்கிருந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும்,; இவர்கள் இருவரும் ஏற்கனவே இதே போன்று விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் டொலரை பணமாக மாற்றித் தரும்படி கேட்டு அங்கிருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி 84,000 ரூபாய் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் துருவி துருவி இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர், இதன் முடிவில் அவர்கள் இதுவரை எந்தளவுக்கு இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.