பொங்கல் பரிசு: குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000

பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து கடந்த 19 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி – சேலையின் நிறத்திலும், டிசைனிலும் மாற்றம் செய்யவும், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த ஆலோசித்தனர். ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்புக் கணக்குகள் இல்லை என்பது தெரிய வந்தது.

உடனடியாக இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமென்று மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அதற்காக நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த பரிசுத் தொகையுடன் ஒரு சில மளிகைப் பொருட்களும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.