சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டு திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்டுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சைகள் மற்றும் 52 பரிசோதனை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 வரை இருப்பவர்கள் மட்டும்தான் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியும் என்று இருந்தது. இதனைத் தொடர்ந்து 2022 ஜன.11 முதல் புதிதாக நீட்டிக்கப்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.
இந்தத் திட்டத்தில் தற்போது 800 அரசு மருத்துவமனைகள் மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பம் ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இது தொடர்பான முழு விவரங்களை www.cmchistn.com என்ற இணையதளம் முலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தாலும், 50 சதவீத காப்பீட்டுத் தொகை தனியார் மருத்துவமனைகளுக்குதான் சென்று சேருகின்றன.
2012-ம் ஆண்டு இந்தத் திட்டத்தின் மூலம் 2,21,706 பேர் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு 479 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை 6,09,307 கோடி பேர் சிகிச்சை பெற்று இருந்தனர். இவர்களுக்கு ரூ.753 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
- 2012 – 2,21,706 – ரூ.479 கோடி
- 2013 – 3,92,610 – ரூ.689 கோடி
- 2014 – 4,44,505 – ரூ.702 கோடி
- 2015 – 5,15,160 – ரூ.791 கோடி
- 2016 – 5,51,489 – ரூ.816 கோடி
- 2017 – 6,41,951 – ரூ.914 கோடி
- 2018 – 7,01,323 – ரூ.894 கோடி
- 2019 – 7,64,992 – ரூ.952 கோடி
- 2020 – 5,35,581 – ரூ.624 கோடி
- 2021 – 7,62,390 – ரூ.919 கோடி
- 2022 – 6,09,307 – ரூ.753 கோடி
இவற்றில் 52 சதவீத தொகை தனியார் மருத்துவமனைகளுக்கும், 48 சதவீதம் தொகை அரசு மருத்துவமனைகளுக்கும் சென்றுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2012-ம் ஆண்டு 31%, 2013-ம் ஆண்டு 36%, 2014-ம் ஆண்டு 36%, 2015-ம் ஆண்டு 35%, 2016-ம் ஆண்டு 32%, 2017-ம் ஆண்டு 35%, 2018-ம் ஆண்டு 39%, 2019-ம் ஆண்டு 40%, 2020-ம் ஆண்டு 37%, 2021-ம் ஆண்டு 46%, 2022-ம் ஆண்டு 48% என கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக காப்பீட்டு திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 48% தொகையை அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன.
இதுபோன்று தனியார் மருத்துவமனைகள் 2012-ம் ஆண்டு 69%, 2013-ம் ஆண்டு 64%, 2014-ம் ஆண்டு 64%, 2015-ம் ஆண்டு 65%, 2016-ம் ஆண்டு 68%, 2017-ம் ஆண்டு 65%, 2018-ம் ஆண்டு 61%, 2019-ம் ஆண்டு 60%, 2020-ம் ஆண்டு 63%, 2021-ம் ஆண்டு 54%, 2022-ம் ஆண்டு 52% என கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக காப்பீட்டுத் திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 52 சதவீத தொகையை தனியார் மருத்துவமனைகள் பெற்றுள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகள் 37 சதவீத தொகையும், தனியார் மருத்துவமனைகள் 63 சதவீத தொகையும் பெற்று இருந்தன. ஆனால், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அரசு மருத்துவமனைகளின் சதவீதம் 48% ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளின் சதவீதம் 52% ஆக குறைந்துள்ளது.