திருச்சியில் காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக அதற்கான வீடியோ ஆதாரத்துடன், திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் உறையூர் காவல் நிலையத்திலும் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன்,தமிழக முதல்வரை ஆபாசமாக பேசிய லட்சுமி நாராயணன் மேலும் கௌதம்,காளி உள்ளிட்ட 11 பேர் மீது உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போலீசார், திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திராவிட மாடல் ஒழிக – ஸ்டாலின் ஒழிக என போராட்டம் செய்ததோடு மட்டுமல்லாமல், கைது செய்தபோதும் காவல்துறையினர் முன்பாகவே மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் முழக்கமிட்ட பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவர் உட்பட ஒன்பது பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நேற்று இரவு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பல ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை, தமிழக அரசே ஏற்றி நடத்தும் நடைமுறை கடந்த 2002 இல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. TASMAC எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் தொடங்கப்பட்ட அரசு மதுபான கடைகள் இன்று மெல்ல மெல்ல வளர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 6,000க்கும் மேற்பட்ட கடைகளாக வளர்ந்து நிற்கின்றன.
கள்ள சாராயத்தை ஒழிக்கவும், அதனால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான விற்பனை கடைகளை நடத்த முடிவு செய்ததாக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் இந்த முடிவுக்கு அப்போது நியாயம் கற்பிக்கப்பட்டது.
ஆனால் ஒரு காலத்தில் ஊருக்கு பயந்து, ஊரின் ஒதுக்குப்புறமாக விற்கபட்டு வந்த சாராயத்தை, மதுபிரியர்கள் மறைந்து மறைந்து குடித்து வந்த நிலை மாறி. இன்று விடியற்காலையிலேயே மது அருந்திவிட்டு சாலைகளில் தன்னிலை மறந்து குடிகாரர்கள் மயங்கி விழுந்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய சமூக கேடாக உருவெடுத்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கோடிகணக்கில் வருவாய் கொட்டுவதால், இதனை மூட அதிமுக அரசோ, திமுக அரசோ தயாராக இல்லை.
ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து கூட்டணியில் அங்கம் வகித்துவரும் பாஜகவின் கண்களுக்கு, தற்போதைய திமுக ஆட்சியில் கண்ணில் படும் டாஸ்மாக் மதுபான கடைகள், அதிமுக ஆட்சி்யில் ஏன் படவில்லை என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.