விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருதரப்பினர் பூஜை முறைகள் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கையின்படி கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய நிர்வாகத்தரப்பினர், உடன்படிக்கைப்படி கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் நிர்வாக சாவியை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை கோயில் சாவி மற்றொரு தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானது.


தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பேசியவர்கள், கோயில் சாவி, பூசாரி உட்பட அனைவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். இதை எதிர்தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமாதானக் கூட்டத்திலும் இந்தப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க கோயிலை பூட்டி சீல் வைப்பதென அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் மூலமாக கோயில் பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் வரை கோயில் சாவி வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பதென கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஊர்மக்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் காவல்துறை உதவியுடன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல்வைத்தனர்.