ஜெய்ப்பூர், ராஜஸ்தானில், 2 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை வைத்து காரை மோதி கொலை செய்து, விபத்து என கூறி நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி சாலு தேவி, 32. கடந்த நவ., 5ம் தேதி, ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் தன் உறவினருடன் சென்ற சாலு தேவி மீது, சொகுசு கார் மோதியது. இதில் சாலு தேவியும், அவரது உறவினரும் இறந்தனர்.
புகார்
இதை விபத்து என போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சாலு தேவியின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மகேஷ் சந்தின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் விசாரித்தனர். சமீபத்தில் அவர் மனைவி பெயரில் போட்டிருந்த இன்ஷூரன்ஸ்தொகை, 2 கோடி ரூபாயை பெற்றது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்ததில், மகேஷ் சந்த் மீது, அவரது மனைவி சாலு தேவி ஏற்கனவே வரதட்சணை புகார் கொடுத்திருப்பதும் தெரிந்தது.
மகேஷிடம் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணை யில், இன்ஷூரன்ஸ் தொகைக்காக கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மகேஷுக்கும், சாலுவுக்கும் 2015ல் திருமணம்ஆனது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு, மனைவியை மகேஷ் துன்புறுத்தியுள்ளார். இது குறித்து சாலு தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சாலு, தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே, ஒரு ஆண்டுக்கு முன் தன் மனைவி பெயரில் மகேஷ், 2 கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் போட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சாலுவை தொடர்பு கொண்ட மகேஷ், ‘நம் குடும்பத்துக்காக ஆஞ்சநேயர் கோவிலில் நேர்ந்துள்ளேன்.
‘தொடர்ந்து, 11 மாதங்களுக்கு கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் நீ சென்று வழிபட வேண்டும். நேர்த்திக் கடன் முடிந்ததும் நீ வீட்டுக்கு வந்து விடலாம். நாம் சேர்ந்து வாழலாம்’ என கூறியுள்ளார்.
இதை நம்பிய சாலு, கடந்த சில மாதங்களாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளார். நவ., 5ல், தன் உறவினர் ஒருவருடன் சாலு, ஆஞ்சநேயர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
விசாரணை
அப்போது மகேஷ் ஏற்பாடு செய்த கூலிப்படையினர், சொகுசு காரில் சென்று சாலு மீது மோதி விபத்து ஏற்படுத்தி நாடகமாடி உள்ளனர். இதற்காக கூலிப்படையினருக்கு, 5 லட்சம் ரூபாய் முன் பணமாக மகேஷ் கொடுத்துள்ளார்.
விசாரணையில் குற்றங்களை ஒப்புக் கொண்டதை அடுத்து, மகேஷையும், அவர் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையினரையும் கைது செய்தோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்