வதந்தி வெப் தொடர் எப்படி இருக்கு? விமர்சனம்!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ்ஜே சூர்யா தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் வில்லன்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்து வருகிறார். மெர்சல், மாநாடு என வில்லனாக இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றியடைந்து வருகின்றன.  தற்போது ஓடிடி பக்கம் திரும்பியுள்ளார் எஸ்ஜே சூர்யா, அமேசான் பிரைமில் வதந்தி என்ற தொடர் மூலம் கால்பதித்துள்ளார்.  ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ள வதந்தி முதல் சீசன் 8 தொடர்களாக உருவாகி உள்ளது.  இதன் ட்ரைலர் வெளியானதில் இருந்து பலரும் பார்க்க ஆர்வமாக இருந்தனர்.  சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்ம்ருதி வெங்கட், அஸ்வின் குமார் என பலர் நடித்து உள்ளனர்.

கன்னியாகுமரி பகுதியை சுற்றி இந்த தொடர் நடைபெறுகிறது.  ஆரம்பத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.  அது மிகப்பெரிய ஹீரோயின் என்று ஊடகங்களில் சொல்லப்படுகிறது.  ஆனால், இறந்ததாக சொல்லப்படும் ஹீரோயின் உயிருடன் தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.  இறந்தது அந்த பகுதியை சேர்ந்த பெண் என்பது தெரியவருகிறது.  போலீசாரின் விசாரணையை ஒப்புக்கொள்ளாத நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக எஸ்ஜே சூர்யாவை நியமிக்கிறது.  பின்பு அவர் எப்படி இந்த கொலையை கண்டுபிடிக்கிறார் என்பதை பல சுவாரஸ்யங்களுடன் சொல்லப்பட்டு இருக்கிறது வதந்தி தொடர்.  

எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார்.  போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார்.  கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம்.  சஞ்சனாவிற்கு இந்த தொடர் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.  பல இடங்களில் சிறப்பாக நடித்துள்ளார், கதைக்கும் முக்கிய கதாபாத்திரமாக உள்ளார்.  லைலாவிற்கு சர்தார் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.  வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  எழுத்தாளராக நாசர் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக உள்ளார்.  வதந்தி தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  

போலீஸ் எப்படி ஒரு கொலையை துப்பு துலக்கும் என்பதை டீடைலாகவும், இன்ட்ரெஸ்டிங் ஆகவும் சொல்ல முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர்.  குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் கூடுதல் வலுசேர்த்து இருக்கிறது.  கன்னியாகுமரி பகுதியில் நடப்பதால் அந்த பகுதி மக்கள் பேசும் மொழியையும் கதைக்குள் புகுத்தி உள்ளனர்.  ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது வதந்தி. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.