மதுரை: வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த சந்திரசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டப்படி இரு சக்கர வாகனங்களில் விதிமுறைப்படியே நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும். ஆனால் வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்டுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களை ஒட்டியுள்ளனர். விரும்பும் வடிவங்களில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இது சட்டவிரோதமாகும்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்றவும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், மனுதாரர் பாஜக நிர்வாகி. அவர் அளித்த மனுவில் கோரிக்கையை மட்டும் தெரிவிக்காமல், கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என மிரட்டும் வகையில் என்று கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ஒரு கோரிக்கை வைக்கும்போது மனுவில் மிரட்டும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது. இதனால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் இவ்வாறு கூறுவது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் நீங்கள் (நீதிபதிகள்) வெளியே வர முடியாது என சொல்வது போல் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ”இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் அரசு விதிமுறைப்படியே நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும். நம்பர் பிளேட்டுகளில் எழுத்துக்கள் விதிமுறையை பின்பற்றாமல் வேறு வடிவிலோ, தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களோ இருக்கக்கூடாது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார் தினமும் வாகனச் சோதனை நடத்தி, விதிமீறிய நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும். விதிமீறல் வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.