ஜெய்ப்பூர்: பணத்தாசையால் மனைவியை கூலிப்படை மூலம் கொன்ற ராஜஸ்தான் மாநில கணவரின் செய்கை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. 1.9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காக, ஆள் வைத்து மனைவியைக் கொண்றிருக்கிறார் கணவர் மகேஷ் சந்த். கடந்த 2015ம் ஆண்டு ஷாலுவுக்கும் மகேஷ் சந்துக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஷாலுவின் குடும்பத்தினர், ஒப்புக்கொண்ட வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.
மகேஷ் மீது வழக்கு தொடர்ந்த ஷாலு தனியாக வாழ்ந்து வந்தார். அதனால், பிரச்சனைக்குரிய மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டு சதி செய்திருக்கிறார் கணவர் மகேஷ் சாந்த். ஷாலுவை சமாதானப்படுத்தி ஒன்றாக வாழத் தொடங்கிய மகேஷ், கோடிக்கணககன ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார். அதன் பிறகு, மனைவியை கொலை செய்ய உரிய காலம் வரை காத்திருந்த அவர், சமயம் வந்ததும், திட்டத்தை செயல்படுத்தினார்.
கோவிலுக்கு ஒரு வேண்டுதல் வைத்திருப்பதாக மனைவியிடம் சொன்ன மகேஷ், அதற்காக, ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு 11 முறை செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கணவரின் பேச்சை மனைவி ஷாலு நம்பி, அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற கோவிலுக்கு செல்லத் தொடங்கினார்.
அக்டோபர் 5 ஆம் தேதி, ஷாலுவும் அவரது உறவினர் ராஜூவும், அதிகாலை 4.45 மணியளவில் கோவிலுக்கு மோட்டர்சைக்கிளில் சென்றனர். அவர்கள் சென்ற மோட்டர்சைக்கிள் மீது ஒரு எஸ்யூவி காரி மோதிவிட்டு சென்றது. அந்த காரைத் தொடர்ந்து மகேஷ் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார்.
விபத்தில் சிக்கிய மோட்டர்சைக்கிளில் இருந்த ஷாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷாலுவின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலில் இந்த மரணங்களை சாலை விபத்தாக அனைவரும் நினைத்தார்கள். மனைவி ஷாலு தேவி இறந்த பிறகு கணவர் மகேஷ் சந்த்துக்கு 1.9 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் பணம் கிடைத்துவிட்டது. இதனால் காவல்துறைக்குச் சந்தேகம் வந்து, இது தொடர்பாக ஆழமாக விசாரித்தபோது, இது விபத்து அல்ல என்றும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.
தனது மனைவியை காப்பீடு பணத்துக்காகத் திட்டமிட்டு கொலை செய்ததை கணவர் மகேஷ் ஒப்புக்கொண்டார். அதையடுத்து மகேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இருவர் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.