Gujarat Polls : பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பேரணி… 50 கி.மீ., 16 தொகுதிகள்!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (டிச. 1) நடைபெற்றது. இதையடுத்து, டிச. 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, டிச. 8ஆம் தேதி குஜராத் மட்டுமின்றி ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஏறத்தாழ இரண்டு மாநிலங்களில் யார் ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறார்கள் என்பது அன்றே தெரிந்துவிடும். 

இந்த சூழலில், முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், பிரதமர் மோடி நேற்று மாலை குஜராத்தில் பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டார். இந்த பேரணிதான் இந்திய தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட வாகன பேரணி என கூறப்படுகிறது. 

சுமார் 50 கி.மீ.,க்கு திட்டமிடப்பட்ட இந்த பேரணி, நேற்று மாலை நரோதா காம் பகுதியில் இருந்து தொடங்கியது. 2002ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி குஜராத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. இதில், நரோதா காம் பகுதியும் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகியது. ஏறத்தாழ 97 இஸ்லாமியர்கள் அப்போதைய கலவரங்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, அந்த பகுதியில் இருந்து தனது வாகன பேரணியை பிரதமர் மோடி திட்டமிட்டு தொடங்கியுள்ளார். இந்த 50 கி.மீ., பேரணியில், 16 தொகுதிகளின் வழியாக பிரதமர் மோடி பயணித்தார். 

நரோதா காமில் தொடங்கிய பிரதமரின் பேரணி, தக்கர்பாபா நகர், பாபுநகர், நிகோல், அம்பாவாடி, மணிநகர், டானிலிம்டா, ஜமால்பூர் காடியா, எல்லிஸ்பிரிட்ஜ், வெஜல்பூர், கட்லோடியா, நாரன்பூர், சபர்மதி என முக்கிய சட்டப்பேரவை தொகுதிகளின் வழியாக சென்று, இறுதியில் காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைந்தது. மொத்தம், இந்த பேரணி 4 மணிநேரம் நடந்தது. 

இத்தேர்தலில் பாஜகவின் மிகப் பெரிய பிரச்சார நிகழ்ச்சியாக இந்த பேரணி அமைந்துள்ளது. பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, மேளம் முழங்க அணிவகுத்துச் சென்றனர். மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிரதமர், திறந்த வாகனத்தில் ஏறி, சாலைகளில் திரண்டிருந்த மக்களை நோக்கி ஆரவாரத்துடன் கை அசைத்தபடியே சென்றார்.

இந்திய அரசியல் தலைவர் ஒருவரின் மிக நீண்ட வாகன பேரணி இது என்று பாஜக கூறுகிறது. பண்டிட் திண்டயால் உபாத்யாய், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோரின் நினைவுச்சின்னங்களின் வழியாக இந்த பேரணி சென்றது. அந்த நினைவுச் சின்னங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1995ஆம் ஆண்டில் இருந்து குஜராத்தில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காத்திருக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இருப்பதால் குஜராத் தேர்தல் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

பாஜக முதலில் அதிக தொகுதிகளை வென்று வந்தபோதிலும், அடுத்தடுத்த தேர்தல்களில் அதன் வெற்றி எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. மொத்தமுள்ள 180 தொகுதிகளில், 140 இடங்களை பெற்றது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 99 இடங்களை மட்டுமே பாஜக வென்றிருந்தது. காங்கிரஸ் 77 தொகுதிகளை கைப்பற்றியது. 

குஜராத் மாநிலத்தின் அதிக காலம் முதலமைச்சராக இருந்தவரும், அதிகம் செல்வாக்கு மிக்கவருமான பிரதமர் மோடிதான், இந்த தேர்தலிலும் பாஜகவின் பிரச்சார முகமாக இருக்கிறார். நடப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, அவர் மாநிலத்தில் 20 பேரணிகளில் உரையாற்றியுள்ளார், மேலும் ஏழு பேரணிகள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.