தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்றும் அதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தான் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர் ஆன்லைன் தடை சட்டம் மற்றும் ஒழுங்குப்படுத்துவதற்கு அதற்கான விதியை அரசு முன்னாள் நீதிபதிகள் வைத்து உருவாக்க உள்ளது. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை அரசு உருவாக்க உள்ளது.
அரசாணை வெளியிடாததால் எந்த தவறும் நடக்கவில்லை. ஏற்கனவே ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், அந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பது உண்மை.
அரசாணை பிறப்பித்தால் வேறு யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கிவிட்டால் சட்டசபையில் இந்த சட்டத்திற்கான சட்ட முன் வடிவு தாக்கல் செய்து அனுமதி பெற முடியாது என்பதால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதில் தமிழக அரசு எந்த தவறும் செய்யவில்லை, அண்ணாமலை கூறுவது தவறு.
ஆளுநரை நாங்கள் குறை கூறவில்லை, காலதாமதப்படுத்துகிறார் என்றுதான் நாங்கள் கூறி வருகிறோம். அரசாணை வெளியிடுவதற்கான காரணத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அதை அண்ணாமலை மறைத்துவிட்டார்.
ஆளுநரை நான் சந்தித்தபோது அவர் மேலும் பல சந்தேகங்களை கேட்டார். அவற்றையும் நாங்கள் நிவர்த்தி செய்துவிட்டு வந்துள்ளோம். மீண்டும் ஏதாவது சந்தேகம் இருந்தால் அதையும் நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.