ஆவண எழுத்தர்கள் நல நிதியம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பதிவுத் துறை சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆவண எழுத்தர்கள் நல நிதியம் உருவாக்கப்படும் என்று கடந்த 2007-08-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 2010-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் இந்த நல நிதியத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, 2021-22-ம் நிதியாண்டுக்கான பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், ஆவணஎழுத்தர்கள் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, உதவித்தொகை குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போதுள்ள பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில், நிதியத்தை நடைமுறைப்படுத்த, சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5,188 பேரிடம், விருப்பத்தின் அடிப்படையில் நல நிதியத்தில் உறுப்பினராக சேர ஒரு முறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1,000 வசூலிக்கப்படும். இதுமட்டுமின்றி, பதிவுத் துறையில் பதிவாகும் ஒவ்வொரு பத்திரத்துக்கும் தலா ரூ.10, ஆவண எழுத்தர்கள் நலநிதியத்துக்காக வசூல் செய்யப்படும். இது நிதியமாக நிர்வகிக்கப்பட்டு, அதில் இருந்து நல நிதியத்தின் நலத் திட்டங்களுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்.

நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்துக்கு உதவித் தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு, கல்வி,மூக்குக் கண்ணாடி உதவித் தொகைகள், இறுதிச் சடங்கு நிதிபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பதிவுத் துறை தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலர்கள் மற்றும் ஆவண எழுத்தர் சங்கத்தில் இருந்து நியமனம் செய்யப்படும் 4 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு இந்த நல நிதியத்தை நிர்வகிக்கும்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நல நிதியத்தை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வணிக வரி,பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி,தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவன் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.