சென்னை: இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் திணிப்பதை எதிர்க்கிறேன். நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-வதுபட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில், 5,176 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களும், சிறப்பாகப் பயின்ற 41 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டம் மற்றும்நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுபேசியதாவது: கல்வி நிறுவனங்கள் படிப்பில் மட்டுமின்றி, ஒழுக்கம்சார்ந்த நன்னெறி மதிப்பீடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தேசியகல்விக் கொள்கையின் அம்சங்களை முறையாகப் பின்பற்றுகிறது.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக, பல்வேறு கலாச்சாரம், மொழிகளுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
அதன்படி, நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்து நீதிபதிகளிடம் பேசி வருகிறேன். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
65 ஆயிரம் வார்த்தைகள்: நீதிமன்றங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் 65 ஆயிரம் வார்த்தைகளை, வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.
இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். அந்தந்த மாநில மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமானவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பொது மொழியாக இருந்தாலும், மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் மூலம் அனைத்து மொழிகளையும் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். அதன்மூலம், பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்கள், நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
உள்ளூர் மொழிகளில் சட்டப்படிப்புகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைவரும் வழக்காடு மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும். சாமானியனுக்கும், நீதிமன்றத்துக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
வழக்காடுவதற்கு முன்பு, மனுதாரர்களிடம் வழக்குத் தொடர்பாகப் பேசுவதற்கு கட்டணம் வாங்கவேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதை அனைத்து வழக்கறிஞர்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மிகவும் வேதனைக்குரியது. இதனால் பொதுமக்கள் நீதிக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.
தொந்தரவுகள் வரக்கூடும்: ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது, “நம் நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகின் முக்கிய இடத்தில் இந்தியா இருக்கும். அதற்கு உங்களின் பங்களிப்பு அவசியம். நீங்கள் வளரும்போது, நாடு தானாக வளரும். எனவே, எந்த துறையில் இருந்தாலும், சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு, மொழி, இனம், மதம்,சாதி என்ற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதை நாம் கவனமுடன் எதிர்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்” என்றார்.
விழாவில், தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, துறைச் செயலர் பி.கார்த்திகேயன், அம்பேத்கர் சட்டப் பல்கலை. துணைவேந்தர் சந்தோஷ் குமார், பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.