விருதுநகர் மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் இரண்டு மகள்களை தவிக்கவிட்டு தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் எஸ்.வி.பி.என்.எஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (41). இவரது மனைவி அருணா மகேஸ்வரி (37). இவர்களுக்கு அருணா ஸ்ரீ (17), மேகா ஸ்ரீ (14) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கார்த்திக் ராஜா அதே பகுதியில் பெய்து கடை நடத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இரண்டு மகள்களும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தூங்க சென்ற போது, கடன் பிரச்சனையால் மனவேதனையில் இருந்த கார்த்திக் ராஜா மற்றும் அவரது மனைவி வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு வந்த இரண்டு மகள்கள் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்த போது, கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் கடன் பிரச்சினை குறித்து குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.