ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சிக்குள்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 2 கழிவறைகளையும் பட்டியலின மாணவர்களை வைத்து தூய்மைப்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில், பெற்றோர்கள் பெருந்துறை போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவர்களையும், பெற்றோரையும் நேரில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கீதாராணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கீதாராணி கைதும் செய்யப்பட்டார். அவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 301 (ஆர்), 310 (ஜே), 75, இதச 286 போன்ற 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று அவரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
எந்த தொடக்கப்பள்ளியிலும் கழிவறையை சுத்தம் செய்ய தனியே ஆள்களை நியமனம் செய்யப்படாமல் இருப்பதும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட காரணமாக உள்ளதாக ஆசிரியர்கள் சிலர் புகார் கூறுகின்றனர். “கழிவறையை தூய்மைப்படுத்த ஆட்கள் இல்லை என்ற காரணத்துக்காக மாணவர்களை, குறிப்பாக பட்டியலின மாணவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவது குற்றச்செயல்” என்கிறார் ஜோதிசந்திரா.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதிசந்திராவிடம் பேசினோம். அப்போது நம்மிடம் அவர், “துடுப்பதி, பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி மீது மாணவர்களும், பெற்றோரும், பெருந்துறை போலீஸிலும், மனித உரிமை ஆணையம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் போன்றவற்றில் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரளிக்கப்பட்ட நாளில் தலைமையாசிரியை கீதாராணியிடம் விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகுமாறு அழைத்தும் அவர் வரவில்லை.
அதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டதுடன், அடுத்த நாள் 3 வட்டார கல்வி அலுவலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்காக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு கூட பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், தலைமையாசிரியை மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகே பெருந்துறை போலீஸில் கீதாராணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே தலைமையாசிரியை கீதாராணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.

இதற்கான உத்தரவை கீதாராணியிடம் வழங்குவதற்காக அவரின் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொள்ள வீட்டில் அவர் இல்லாததால் அந்த வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. பள்ளிகளுக்கு கழிவறையை தூய்மைப்படுத்துவதற்கென தனி அலவன்ஸ் வழங்கப்படுகிறது. கழிவறையை தூய்மைப்படுத்தும் பணியில் எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செயல்படுவதைக் கண்டறிந்தால் அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஏற்கெனவே அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் வட்டார கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் அந்த ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும்” என்றார் உறுதியுடன்.