ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டம்,மால்கோன் கிராமத்தில் சுண்ணாம்பு கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் செயல்படுகின்றன. அந்த கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அரசு அனுமதியின்றி சுமார் 10 அடி ஆழத்துக்குசுரங்கம் அமைத்து சுண்ணாம்புகற்களை வெட்டி எடுத்தனர். அவர்கள் நேற்று சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்தது.
தகவல் அறிந்து கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். புல்டோசர்கள் உதவியுடன் மணல் குவியல் அகற்றப்பட்டது. 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.