தஞ்சாவூர் அருகே சம்பா நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை: செம்மண் கொட்டியதால் விவசாயிகள் போராட்டம்

திருவையாறு: தஞ்சாவூர் அருகே நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த புறவழிச்சாலை விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் 150அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடிக்கு தற்போது செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று கண்டியூர் பகுதியில் உள்ள வயல்களில் சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரண்டதோடு, கருப்பு கொடியை வயல்களில் கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், எங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீசும் முறைப்படி வழங்கப்பட வில்லை. அதற்கான இழப்பீடு தொகையையும் கொடுக்கவில்லை. தற்போது கோ 51 நெல் ரகத்தை சம்பா சாகுபடியாக நடவு செய்துள்ளோம். நெற்கதிர் வரும் தருவாயில் உள்ளது. எங்களது கண்முன்னே நெற்கதிரை அழிப்பதை பார்க்க முடியவில்லை. எனவே அறுவடை முடிந்ததும் புறவழிச்சாலை பணியை தொடங்குங்கள். எங்களுக்கு உரிய இழப்பீடை அதிகப்படுத்தி தாருங்கள். விவசாய நிலத்தை அழித்துதான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு சாலையே எங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தனர்.

அப்போது டிஎஸ்பி ராஜ்மோகன், இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலை அமைக்கும் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசார் கைது எச்சரிக்கையை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழிக்கும் பணி தொடர்ந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் கூறியதாவது: விவசாயிகளின் அனுமதி ஏதும் இல்லாமல் அறுவடை செய்யக்கூடிய சம்பா நெற்பயிரை சமாதி செய்து சாலை அமைக்கப்படுகிறது. நெற்பயிரை அழிப்பதை நேரில் பார்க்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைகின்றனர். எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை. சம்பா சாகுபடி முடியும் வரை சாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.