தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது காங்கிரஸ் – கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் அரசியலுக்காக நடத்தப்படுவதில்லை என, தமிழக கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் இன்று, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

தமிழ் வளர்ச்சிக்கு பாஜக முக்கியத்துவம் தருகிறது என அவர்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அமித் ஷாவின் கல்விக் கொள்கையில் முக்கிய தேர்வுகளை ஹிந்தியில் தான் கேள்வி இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அது தவறு. எனவே அவர்கள் ஒரு மாநில மொழி தமிழை ஆதரிக்கிறேன் என்று கூறுவது ஒரு வேடிக்கையான விஷயம்.

உண்மையிலேயே அவர்கள் தமிழ் மொழியை ஆதரிக்க வேண்டும் என எண்ணி இருந்தால் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைத்து இருக்க வேண்டும். எந்த தமிழ் அறிஞரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

பாரதிய ஜனதா நபர்கள் அரசியல் செய்வதற்காக இதனை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டு முதலமைச்சரை அழைத்து இருக்க வேண்டும். தமிழ் அறிஞர்களை அழைத்து இருக்க வேண்டும். இவர்களையேல்லாம் தவிர்த்து விட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். எனவே பாரதிய ஜனதாவின் செயல் திட்டத்தில் இது ஒரு மறைமுகமான செயல் திட்டம்.

காங்கிரஸ் கட்சி தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது செம்மொழி அந்தஸ்து அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. எனவே காங்கிரஸ் கட்சியை விட மாநில மொழிகளுக்கு பாஜக எதுவும் பெரியதாக செய்து விடவில்லை. மொழி வாரிய மாநிலங்களை உருவாக்கியதும் காங்கிரஸ் தான்.

இவர்கள் செய்வதெல்லாம் ஒற்றை மொழி; ஒற்றை கலாச்சாரம்; ஒற்றை ஆட்சி என்ற கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு உள்ளேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் சொல்கின்றன. ராகுல் காந்தியின் நடைபயணம் அரசியலுக்காக நடத்தப்படுவது அல்ல, காந்தி செய்ததைப் போல இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த அவர் சென்று கொண்டிருக்கிறார். இதில் அரசியல் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.