ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘சர்க்கஸ்’ திரைப்படம் டிசம்பர் 23ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது, மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை வாரத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளது. பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘தி காமெடி ஆஃப் எரர்ஸ்’ என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு இந்த ‘சர்க்கஸ்’ படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரோஹித் ஷெட்டி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜானி லெவர், பூஜா ஹெக்டே, வருண் சர்மா மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
‘சர்க்கஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது, அப்போது இயக்குனரிடம் எந்த தென்னிந்திய நடிகருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இயக்குனர் பதிலளிக்கையில், நான் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான விஜய், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறினார். மேலும் அவரிடம் தளபதி விஜய் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவரையும் ஒன்றாக வைத்து படம் பண்ணுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, பதிலளித்தவர் விஜய் மற்றும் ரன்வீர் சிங் இருவருமே சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள், அவர்கள் இருவரையும் வைத்து படம் எடுப்பதில் விருப்பம் உள்ளது என்று கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்‘ படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்று ரன்வீர் சிங் கூறியிருந்தார், மேலும் அந்த படத்தில் பிரபலமான பாடலாக இருக்கும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரன்வீர் மேடையில் நடனமும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து பார்க்கும்போது விஜய்யும், ரன்வீர் சிங்கும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது, அப்படி இருவரும் ஒன்றாக நடிக்க ஒப்புக்கொண்டால் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்த இரண்டு பிரபலங்களுக்கும் எப்படிப்பட்ட கதையை உருவாக்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.