புதுடெல்லி: தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற எல்.எம்.சிங்வி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தன்கர் பேசியதாவது: “இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் நாம் இந்தியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றம் மக்களின் தேர்வு மற்றும் மக்களின் ஞானத்தைக் குறிக்கிறது. அதாவது அதிகாரம் மக்களிடமே இருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மக்களவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது ஒருவர் மட்டுமே வாக்கெடுப்பை தவிர்த்தார். மற்ற அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றினர். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. எனினும், இது தொடர்பாக எவ்வித ரகசிய பேச்சையும் நாடாளுமன்றம் பேசவில்லை. உண்மையில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மிகவும் தீவிரமான பிரச்சினை” என்று அவர் கூறினார்.
உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பாக தற்போது கொலீஜியம் உள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மூத்த நீதிபதிகள் 4 பேர் உள்ளனர். இந்த கொலீஜியம் முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக, மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இணைந்து நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில் கடந்த 2015-16ல் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த அரசியல் சாசன திருத்தம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி இந்த திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிபதிகளே சக நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலீஜியம் நடைமுறை சரியானது அல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறி வருகிறார். இதையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். இந்நிலையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்திற்கு ஆதரவாக குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.