“மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடன் வழங்க இலக்கு” – அமைச்சர் பெரியகருப்பன்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21,500 கோடி கடன் வழங்கப்பட்டது. அதேபோல நடப்பு ஆண்டும் இலக்கை விஞ்சி கடன் வழங்கப்படும். முந்தைய திமுக ஆட்சியின்போது துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது உள்ளாட்சி மற்றும் ஊராட்சி துறைகளில் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆட்சி மாற்றத்தால் இதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்களின் கண்காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதேபோல இனிவரும் நாள்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கண்காட்சிகள் நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கல்

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியின்போது 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. சாதி, மத  பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே அவைகள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதன் பராமரிப்புக்காக முதல் கட்டமாக கடந்த ஆண்டு 145 சமத்துவப்புரங்கள் ரூ.190 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் புதிதாக சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தாததால் நிதி வருவதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய உள்ளாட்சிக்கான நிதிகள் படிப்படியாக வந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்திலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் அனைத்து கிராம கலைஞர் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே வேளாண் துறையும் உள்ளாட்சித் துறையும் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களில் செயல்படுகின்றன.  பஞ்சாயத்துகள் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.