சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு சிறப்புரை ஆற்றிய அவர்,“மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் உயர்வு மூலம் 4.39 லட்சம் மாற்று திறனாளிகள் பயன்பெறுவர். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டங்கள் தொடங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சென்று கடல் அலையில் தங்களது கால்களை நனைக்க முடியாமல் இருந்தனர்.
#LIVE: உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் தலைமையுரை https://t.co/bMTuhV7UaS
— M.K.Stalin (@mkstalin) December 3, 2022
அதனைப் போக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவர்களுக்கென மரப்பாதை ஒன்றை அமைத்தது. அதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மெரினாவுக்கு சென்று கடல் அலையில் தங்களது கால்களை நனைத்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இவ்வாறு ஒரு திட்டம் கொண்டுவந்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.