மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் – இயக்குநர் அதிரடி

53வது சர்வதேச கோவா திரைப்பட விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். 

அவர் பேசுகையில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம” என்றார்.

அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது பேச்சுக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் நடித்த அனுபம் கேர் கண்டனம் தெரிவித்திருந்தார். தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடாவ் லேபிட் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தும் பிறகு மன்னிப்பு கேட்டும் இருந்தார். 

இந்நிலையில், நடாவ் லேபிட் இந்த சர்ச்சை தொடர்பாக பேசுகையில், “நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமதிக்கவும் நினைக்கவில்லை. என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல.

உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பதாகவே நான் பேசினேன்.‛தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிரசார தன்மை கொண்டதாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்வேன்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.