புதுடில்லி, பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூசேவாலா படுகொலையின் முக்கிய குற்றவாளியான கோல்டி பிரார், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த காங்., பிரமுகரும், பிரபல பாப் பாடகருமான சித்து மூசேவாலா, 28, பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் மே 29ல் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்து கொண்டிருந்தவரை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
இதில், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை, கோல்டி பிரார் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
சித்து மூசேவாலாவின் கொலையை அடுத்து, அவருக்கு கனடாவில் நெருக்கடி அதிகரித்தது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு வந்தவர், அங்கு பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், இவரை கடந்த மாதம் 20ல் அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று உறுதி செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement