இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை ரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச் சிக்கலாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பத்மநாபபுரம் பகுதியில் அமைந்திருந்த மைலர் ரப்பர் தொழிற்கூடமும் கடந்த ஓராண்டிற்கு முன்பு மூடப்பட்டது. தற்போது கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடமும் மூடப்படலாமென்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரப்பர் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதன்படி இதுவரையிலும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடம் முன்பு அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் ரூ.40 ஊதிய உயர்வு கோரி கடந்த 07-11-2022 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு அளித்து ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.