மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் கடந்த மே மாதம் டெல்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக காதலனால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளாமல் இருக்கின்றனர். இந்தநிலையில், டெல்லியில் மற்றொரு பெண் சமீபத்தில் தன் மகனுடன் சேர்ந்து தன்னுடைய கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுக்க விட்டெறிந்தார். தற்போது இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி அது போன்று செய்துவிடுவேன் என்று தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியை சேர்ந்த அர்ஷத் சலீம் மாலிக் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்-இன் பார்ட்னர்) சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அவரது முதல் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
அந்தப் பெண்ணை முதலில் சந்தித்த போது அர்ஷத் தன் பெயரை ஹர்ஷல் மாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இருவரும் சேர்ந்து துலேயில் உள்ள வனப்பகுதியை சுற்றிப்பார்க்க சென்ற போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர். இதற்காக ஒப்பந்தம் தயாரிப்பதற்காக அமல்னர் என்ற கிராமத்திற்கு சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் ஹர்ஷலின் உண்மையான பெயர் அர்ஷத் என்று தெரிய வந்தது. ஆனாலும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இருவரும் ஒஸ்மனாபாத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினர்.

அதன் பிறகு அந்தப் பெண்ணை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி அர்ஷத் சித்ரவதை செய்து வந்தார். இது தொடர்பாக அந்தப் பெண் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.அதில், “ஒஸ்மனாபாத்தில் இருந்து 4 மாதம் கழித்து துலேயிக்கு வந்தோம். அங்கு வந்ததில் இருந்து என்னை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி வந்தார். அதோடு எனக்கு முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் டெல்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்தது போல் உன்னை 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.