'அன்றும் இன்றும் என்றும் கோயில் மக்களுக்கானது' – அழுத்திக் கூறிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (டிச. 4) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். தாலியுடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். 

இதனை தொடர்ந்து, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,”கோவை சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நேற்றிரவுதான் (டிச. 3) சென்னை திரும்பினேன். அந்த களைப்புகள் எல்லாம் போகவே இங்கு வந்தேன். நான் ஏற்கனவே பல கூட்டங்களில் சொன்னது போல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோயில் என்பது மக்களுக்காகத்தான், கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்…

அறநிலையத்துறை கோயிலில் 47 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை உரிமை மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதைப் பல கோயில்களில் இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். கோயில் பொதுச் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளோம். 

ரூபாய் 3,700 கோடி மதிப்பிலான பொதுக்கேயில் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதைச் செயல்படுத்தியுள்ளோம்.. இதுபோன்ற சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் இதைத் தடுக்க முயன்றாலும் அதை எதிர்த்தும் வழக்கு நடத்தி வருகிறோம்..

ஆதாரம் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை சிலர் கூறி வருகின்றனர். அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்து வருகிறார். தமிழகத்தில இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 

நாம் இருவர் நமக்கு ஏன் மற்றொருவர்

இந்த ஆட்சி, எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் நடைபெற்று வருகிறது. மணமக்கள் ஒன்றோ இரண்டோ குழந்தையுடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும், அளவான குழந்தைகளை பெற்று அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு பெருமளவு செலவு செய்து வருகிறது.

 

முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னோம். அது பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றும் மாறியது. தற்போது நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் என கூறப்படுகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.