கோவில்பட்டி/சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் நினைவரங்கம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சிஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் முழுவுருவச் சிலையுடன் நினைவரங்கம், மின்னணு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்துதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கி.ரா.நினைவரங்கத்தை திறந்து வைத்தார்.
நினைவரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தில் கி.ரா. எழுதிய புத்தகங்களின் தொகுப்புகள் உள்ளன. தொடுதிரையில் விரும்பிய புத்தகத்தை தொட்டதும் அந்த நாவல் அல்லது சிறுகதையை நாம் வாசிக்கலாம். மேலும் இங்குள்ள நூலகத்தில் கி.ரா. உட்பட கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவுள்ளன.
கோட்டாட்சியர் மகாலட்சுமி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அருணாசலம், செயற் பொறியாளர் தம்பிரான் தோழன், நகராட்சித் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் கி.ரா.வின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் கீதாஜீவன்கூறும்போது, “தமிழகத்தில் முதல்முறையாக ஓர் எழுத்தாளரை, கவுரவப்படுத்தி நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு புத்தகத் திருவிழா கோவில்பட்டியில் நடத்தப்படும்” என்றார்.
சென்னை நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் வெ.இறையன்பு செய்தித்துறை செயலர் ம.சு.சண்முகம், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ தனது ஆதரவாளர்களுடன் வந்து கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்தார்.