தஞ்சை அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்தது: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், தரங்கம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து மங்கநல்லூர் பொதுப்பணித்துறைக்கு டீசல் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே கேட்டில் லாரி மோதியதில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்னலுக்கு மின்சார இணைப்பு கிடைக்காமல் கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கங்களில் வந்த ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கும்பகோணம், மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை திருச்சி பாசஞ்சர், திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் மயிலாடுதுறை பாசஞ்சர், திருச்சி மயிலாடுதுறை பாசஞ்சர், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். ரயில்வே பணியாளர்கள் எச்டி லைன் சீரமைக்கும் பணியை நள்ளிரவு 11 மணி முதல் மேற்கொண்டனர். பணி முடிய காலதாமதம் ஆகும் என்பதால் டீசல் இன்ஜின் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் ஆடுதுறை, குத்தாலம் பகுதியில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை இயக்கும் பணி நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி வரை எக்ஸ்பிரஸ் ரயில்களும் அப்பகுதியை கடந்து செல்ல மாற்று ஏற்பாடு செய்தனர். இதன்காரணமாக இந்த மார்க்கத்தில் சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 4 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.